பக்தர்களால் சுமந்து கொண்டுவரப்பட்ட மாசாணியம்மன் குண்டம் விழா கொடிமரம்
பொள்ளாச்சி,ஜன.19- ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா ஜனவரி 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தமிழகத்தில் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மாசாணி அம்மன் கோயிலில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் மாசாணியம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த கோயிலின் முக்கிய திருவிழாவான குண்டம் திருவிழா ஆண்டு தோறும் தை அமாவாசையில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா ஜனவரி 21-ம் தேதி கொடியேற்றத்துடன் துங்குகிறது. ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நற்பணி மன்றத்தினர், முறைதாரர்கள், அம்மன் அருளாளிகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள், வியாழக்கிழமை சர்க்கார்பதியில் , 65 அடி நீளமுள்ள மூங்கில் மரத்தை, கொடிகம்பத்துக்கு தேர்வு செய்து வெட்டி எடுத்து வந்தனர். சர்க்கார்பதி மாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
பின்னர், மாசாணி அம்மன் அறக்கட்டளை தலைவர் மற்றும் ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் தலைமையில், தலைமை முறைதாரர் மனோகரன் மற்றும் பல பக்தர்கள் 16 கி.மீ தொலைவுக்கு தோளில் சுமந்து மாசாணியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தக் கொடி கம்பம் 21ஆம் தேதி காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோயில் ராஜகோபுரம் முன்பு நிலை நிறுத்தப்படும். காலை ஏழு முப்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடக்கிறது.
கோயில் குண்டம் திருவிழாவாக பிப்ரவரி மாதம் 3 -ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஆனைமலை ஆழியாற்றங்கரையில் மயானபூஜையும், 4 -ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகாபூஜையும் நடைபெறுகிறது. 5-ம் தேதி மாலை 10.30 மணிக்கு மேல் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
6-ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 7-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல் 10.30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும், 8 ம் தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.