Type Here to Get Search Results !

சசிகலா விடுதலை: பாஜக போடும் பிளான், அச்சத்தில் எடப்பாடி

Top Post Ad

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் வி.கே.சசிகலா விடுதலையாவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரது வருகை அ.இ.அ.தி.மு.கவுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது. வி.கே.சசிகலா தலைமை வகித்த அதிமுகவை உடைத்த டெல்லி தற்போது அதே சசிகலாவை கொண்டே அதிமுகவை இணைக்க முயற்சிக்கிறது.


எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு வி.கே.சசிகலா சிறைக்கு சென்று  சுமார் நான்கு ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலையாக உள்ளார். வி.கே.சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக அவரது வழக்குரைஞர்கள் நடத்திய முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் விடுமுறை நாள்களிலிருந்து பரோலில் இரு முறை வெளியேவந்த நாள்களை கழித்தால் ஜனவரி 27ஆம் தேதி அவர் வெளியாவது உறுதியானது. சிறை நிர்வாகமும் இதை உறுதி செய்துள்ளது.


இந்த மாதம் விடுதலையாக உள்ளதால் மாத தொடக்கத்திலிருந்தே டிடிவி.தினகரன், திவாகரன் உள்ளிட்ட அவரது சொந்தங்கள், அதிமுக, அமமுகவைச் சேர்ந்தவர்கள், வழக்குரைஞர்கள் என பலர் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கர்நாடக சிறைத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வி.கே.சசிகலா விடுதலையாகும் நாளில் அவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தி.நகர் இல்லம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர்.


சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், ரஜினிகாந்த் அரசியலை   கைவிட்ட நிலையில் வி.கே.சசிகலாவின் விடுதலை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வி.கே.சசிகலா வந்த பிறகு  கழகத்திற்குள் எவ்வித பாதிப்பும், தாக்கமும் இருக்காது எஎன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்பதால் உருவான பதற்றமே அவரை இவ்வாறு பேசவைக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். சமீபத்தில் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அமமுக டிடிவி.தினகரன் ஒரு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இனிமேல் அதிமுகவை யாரும் விமர்சிக்க வேண்டாம், திமுகவை மட்டுமே விமர்சியுங்கள் என்பதுதான் அது. இதனால் அதிமுக, அமமுக இணைப்பு ஏற்படும் என பேசப்படுகிறது.


பாஜகவின் தற்போதைய திட்டமும் அதுதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எடப்பாடி கே.பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதில் தமிழக பாஜகவின் நிர்வாகிகள் அதிருப்தி காட்டுகின்றனர். ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் என்று பாஜகவினர்  கூறவில்லை. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் பட்சத்தில் பாஜகவுக்கு வேறு வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போதைய நிலைமையில் அதிமுகவை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பாஜகவுக்கு திருப்தியில்லை. எனவே, அதிமுகவை பலப்படுத்தி அதற்குப் பிறகு  முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.


வி.கே.சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுகவுடன்  வி.கே.சசிகலாவை  கட்சியில் இணைத்து பலப்படுத்தினால் திமுகவிற்கு பலமான எதிர்ப்பு கொடுக்கமுடியும் என்று பாஜக திட்டமிடுகிறது. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்ப்பு காட்டுவார்கள்  என்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக முதல்வராக பதவி வகிப்பதோடு, முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வி.கே.சசிகலா வந்தால் தனது தற்போதைய செல்வாக்கும் அதிகாரமும் குறையும் என எடப்பாடி தரப்பு பயப்படுவதாக தெரிவிக்கிறார்கள். தர்மயுத்தம் நடத்தி பின்னர் அதிமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார். எனவே, எடப்பாடிக்கு எதிர்ப்பை யார் முன்னெடுத்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.


வி.கே.சசிகலா உள்ளே வந்து அமமுக, அதிமுக இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி மீண்டும் எழும். இணைப்பிற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றால் கட்சியை உடைத்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவையும் அமமுகவையும் இணைக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். கட்சியை உடைப்பது, சின்னத்தை முடக்குவது ஆகியவற்றில் பாஜகவுக்கு முன் அனுபவம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அச்சத்தில் உள்ளது. இதனால்தான் அனைத்துக் கூட்டங்களிலும் கட்சியை உடைக்க சதி நடக்கிறது என்று பேசி வருகிறார் என்கிறார்கள் அரசியல் விமசர்கள்.


பாஜகவின் இந்த திட்டங்களுக்கு வி.கே.சசிகலா எந்த அளவிற்கு  ஆதரவு கொடுக்கப் போகிறார், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி விட்டுக்கொடுப்பாரா, முரண்டுபிடிப்பாரா, என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரட்டைஇலை சின்னம் முடக்கப்படுமா?, ஒருவேளை முடக்கப்பட்டால் அது யாருக்கு சாதகமாக முடியும் என்று பல கேள்விக் கணைகள் தமிழக தேர்தல் களத்தில் வலம் வருகிறது. வி.கே.சசிகலா சிறையில் இருந்து  வெளிவந்த பிறகு  அதற்கான பதில்கள் வெளிவரும் என்கிறார்கள்.

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.