முதியவர்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் மாணவர்கள், முதியவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க இலவச பஸ் பாஸ் திட்டமானது நடைமுறையில் உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கும் அடங்குவர்.
இருப்பினும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் இந்த திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இன்றுமுதல் முதியவர்கள் டோக்கன் பெறலாம். 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயணத்துக்கான டோக்கனை முதியோர்கள் பெறலாம். www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே அடையாள அட்டை பெற்றோர், புதிதாக பெற விரும்புபவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10வீதம் 6 மாதங்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். கொரோனா பரவ தொடங்கிய போது முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ் சென்னையில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


