பொள்ளாச்சிபாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் தெரிவித்த பூபாலன் என்பவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் செந்தில், பாபு, மணி, வசந்தகுமார், நாகராஜ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து உலகம் முழுக்க பெரும் பரபரப்பும், எதிர்ப்பும், கண்டனமும் எழுந்தன. மாணவர்களும் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.
அதையடுத்து இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்றியது தமிழக அரசு. அவர்கள் ஐந்து பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். கோவை, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, திருநாவுக்கரசு (25), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (25) சபரிராஜன் (25), சதீஷ் (28), ஆகியோரை கடந்த 2019-ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் முதலில் கைது செய்தனர்.
மேற்கண்ட இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் வழக்கின் தன்மையை கருதி, மேற்கண்ட இரண்டு வழக்குகளும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேற்கண்ட 2 சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ புலனாய்வு அமைப்பினர் புதியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து சிபிஐ ஐஜி மற்றும் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேற்கண்ட ஐந்து பேரையும் சிபிஐ அதிகாரிகள் தாங்கள் பதிவு செய்த வழக்கு தொடர்பாக மீண்டும் அப்போது கைது செய்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட பாலியல் வழக்கு தொடர்பாக, பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகேயுள்ள சங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), பொள்ளாச்சி வடுகபாளையத்தில் உள்ள விகேவி லேஅவுட்டைச் சேர்ந்த பாபு என்ற பைக்பாபு (27), பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அருளானந்தம் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளராக உள்ளதோடு, கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். 'பைக்' பாபு இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
பொள்ளாச்சி நகர அதிமுக மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுடன் இருக்கும் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அருளானந்தத்தை அ.இ.அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அ.இ.அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூன்று பேர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிபிஐ விரைவாக செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்.
அப்பாவிப் பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 6, 2021