மாநில கலைத்திருவிழா : மணல் சிற்பத்தில் அரசு பள்ளி மாணவி சாதனை
ஜன.,6 :
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, திருமலையாம்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது.
இதில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கலைச்செல்வி, நுண்கலை பிரிவில் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணல் சிற்பத்தில் வரைந்து 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
அவரை தலைமை ஆசிரியை ராதிகா, துணை தலைமை ஆசிரியை மேகனா, ஆசிரியர்கள் கெளசல்யா, ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் மாணவி கலைச்செல்வியை பாராட்டினர்.
இது குறித்து ஓவிய ஆசிரியை கெளசல்யா கூறியதாவது: கல்வி கற்றல் என்கிற நிலையைத் தாண்டி, மாணவ மாணவிகளிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறனை, படைப்பாற்றலை வெளிக்காட்ட, திறமையை மெருகேற்றிக் கொள்ள கல்வித் துறையின் 'கலைத் திருவிழா' மேடை அமைத்து கொடுத்துள்ளது. மாணவ, மாணவிகள் இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பாட புத்தகம், தேர்வு மதிப்பெண் என்கிற நிலையைத் தாண்டி மாணவர்களிடம் புதைந்துகிடக்கும் கலைத் திறன், கற்பனை, படைப்புத் திறன்களை வெளிக்காட்டுவதற்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிக்காட்டி சாதிக்க வேண்டும். கலைத் திருவிழா போட்டிகள் நாளை உங்களை சிறப்பான கலைஞர்களாகவும், படைப்பாளர்களாகவும் உருவக்கும். இவ்வாறு அவர் கூறினார்கள்.