வால்பாறை நவ.18., வால்பாறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை நடவடிக்கைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில், காவல்துறை செயல்பாடுகள் குறித்து, பள்ளி மாணவர்கள் அறியும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற, காவல் ஆய்வாளர் கற்பகம் பேசியதாவது:
மக்களிடையே குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், தவறு செய்பவர்களை தண்டிக்கவும், காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுக்க வயது வரம்பு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் புகார் தெரிவித்த உடனே, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
'போலீஸ் உங்கள் நண்பன்' என்பதை பொதுமக்கள் உணரும் வகையில் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். எனவே, காவலர்களை கண்டு பயம் கொள்ளாமல், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் தெரிவியுங்கள் என்று கூறினார்.
நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், ஓவிய ஆசிரியர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.