ஆனைமலையில் நடைபெற்ற சபை கூட்டம்: பொதுமக்கள் மனு அளித்தனர்
ஆனைமலை, நவ.,02:
தமிழகத்தில் இன்று (நவம்பர் 1) உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்வது போல, அரசியலுக்கு அடிப்படை உள்ளாட்சிகள் என்று சொன்னால் மிகையல்ல. உள்ளாட்சிகள் ஒன்றுகூடி தான் ஒரு கிராமத்தை, நகரத்தை, ஒரு மாநிலத்தை, ஒரு நாட்டை கட்டமைக்கின்றன. இதில் பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
உள்ளாட்சி தினத்தை ஒட்டி தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை நகரசபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து நகரங்களிலும் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர்கள் தலைமையில் நகரசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டன.
அந்த வகையில் ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 17வது வார்டில் மாசாணி அம்மன் கோயில் அருகே உள்ள அரசமரத்தடியில் முதல் சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆனைமலை பேரூராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், துணைத் தலைவர் ஜாபர் அலி,
ஆனைமலை பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பொதுமக்கள் அளித்த மனுக்களை ஆனைமலை பேரூராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பேசிய பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், இந்தியாவிலேயே முதன்மை முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். பேரூராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இந்த சபை கூட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே தமிழக அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.