வால்பாறையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
வால்பாறையில், போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இளைஞர்களிடையே போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும்நிலையில், அதை ஒழிக்க வால்பாறை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வால்பாறையில், போதை பொருள் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 11 வது வார்டு காமராஜர் நகரில் பொட்டானிக்கல் கர்டன் அருகில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 11 வது வார்டு கவுன்சிலரும் வால்பாறை நகர மன்ற துணை தலைவருமான செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் பேசியதாவது: இளைஞர்களிடையே போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் நல்லொழுக்கத்தோடு வாழ வழிவகுப்போம். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதியில் யாரேனும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். குழந்தைளுடைய எதிர்காலம் நன்றாக இருக்க போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது மிக அவசியம்.
பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலைகளை உணர்ந்து, யாரேனும் உங்கள் பகுதியில் கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனை செய்தால், உடனடியாக வால்பாறை -94981 01201, காடம்பாறை -94981 01187, முடீஸ் -94981 01176, ஷேக்கல்முடி -82485 47700 என்ற எண்களில், புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, கூறினார்.