கோவில் முன் வெடித்த கார்.. உடல் கருகி ஒருவர் பலி... கோவையில் நடந்தது என்ன?
கோயம்புத்தூரில் இன்று அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவத்தில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்ட பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புயினர், காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியிருப்பது தெரியவந்தது.
உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. சரியாக கோவிலுக்கு முன் கார் வெடித்த காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தகவல் 1 - இந்த கார் வெடிப்பு அதிகாலை 4 - 4.30 மணி அளவில் நடந்து உள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்த காரணத்தால் கார் வெடித்ததாக கூறப்படுகிறது. தகவல் 2 - இந்த கார் வெடித்ததும் இன்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் குண்டு வெடிப்பு என்று செய்தி பரப்பினார்கள். காரில் குண்டு வைத்து கோவிலுக்கு முன் வெடித்து விட்டனர் என்று செய்தி பரப்பினர்.
தகவல் 3 - ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் இதை சிலிண்டர் வெடிப்பு என்று கூறி உள்ளார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
தகவல் 4 - ஏடிஜிபி தாமரைக்கண்ணன் இதை பற்றி விசாரணை நடத்தினார். நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த கார் வெடிப்பை அதிகாலை நேரில் பார்த்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் 5 - சிலிண்டர் வெடிப்புதான் என்று முதல்கட்ட தகவல் வந்தாலும், அதை உறுதி செய்ய தடயவியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. காருக்கு உள்ளே இருந்த பொருட்கள் என்னென்ன என்று தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தகவல் 6 - இந்த கார் மிகவும் பழைய கார் ஆகும். பழைய மாருதி மாடல் கார் இது. இது சிலிண்டரில் இயங்கியதா அல்லது சிலிண்டர் எதுவும் உள்ளே இருந்ததா என்று விசாரணை நடக்கிறது.
தகவல் 7 - தீபாவளி சமயத்தில் கோவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோவை முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவில்களுக்கு முன் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.
தகவல் 8 - 6 சாலைகள் இணைக்கும் பகுதியில் அந்த கோவில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அந்த வெடிப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் 9 - இது யாருடைய கார் என்றும் விசாரணையை செய்யப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகரனிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்தான் 3 வருடங்களுக்கு முன் இந்த காரை விற்று உள்ளார்.
தகவல் 10 -டிஜிபி சைலேந்திர பாபு தற்போது கோவைக்கு விரைந்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளார்.