அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: ஏரிப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளியில் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஏவுகணை நாயகன் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்தநாளையை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, அப்துல்கலாமின் பொன்மொழிகள் 91 கூறி அதன்படி வாழ்க்கையில் நடக்கவேண்டுமென உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், அவரின் பொன்மொழியை பரப்ப geethavelliangiri என்ற You tube channel பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்வழி நடக்க பல்வேறு பள்ளி மாணவர்களின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.
சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கீதா, டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் "சுற்றுச்சூழலில் அப்துல்கலாமின் பங்கு "பற்றியும் பேசினார்.
இதையடுத்து, அப்துல்கலாம் வாசிப்பு மன்றம் மூலம் "வாசிப்பை நேசிப்போம்" "வாசிப்பை சுவாசிப்போம்" என்ற தலைப்பில் செய்திதாள்கள் 91 நிமிடங்கள் மாணவர்கள் தொடர் வாசித்தனர். மேலும், மாதம் இருமுறை, துளிர் அறிவியல் மாத இதழ், பள்ளி நூலக புத்தகங்கள் வாசிப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு தன்மை மேலோங்குவதோடு மட்டுமில்லாமல் அறிவியலில் கண்டுபிடிப்புகள் சாதனைகள் துல்லியத்தன்மை அறிந்து கொள்ள இது ஓர் அரிய வாய்ப்பாக அமைகிறது. ஊரக நூலகத்தில் மாணவர்கள் வாசிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் இம்மன்றத்தின் நோக்கமாகிறது.
மேலும், சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக 191 இலுப்பை விதைகளை நாற்றுப்பண்ணையில் விதையிட்டு மரக்கன்றுகள் தயாரிக்கும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களின் பசுமைப் பணியை பரப்பும் விதமாக, கன்றுகளை வளர்த்து பல்வேறு அமைப்புகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் வீட்டுத்தோட்டத்தை நல்ல முறையில் பராமரித்த மாணவர்கள் தமயந்தி, மாரிக்கண்ணன், ஹரிஹரன், சமிக்ஷாஸ்ரீ, இமய பாரதி, தக்சிதா ஆகியோருக்கு "பசுமை காவலர் விருது" மற்றும் சான்றிதழ்களை தலைமை ஆசிரியை சுகந்தி வழங்கி பாராட்டினார்.