ஆனைமலை பகுதியில் 2 டன் குட்கா பறிமுதல்: விற்பனைக்கு கடத்தி 5 பேர் கைது
ஆனைமலை, அக்.,.18: கேரளாவிலிருந்து ஆனைமலை வழியாக, மதுரைக்கு கடத்த முயன்ற ஒரு டன் குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஆனைமலை காவல்நிலையத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு - கேரளா எல்லையில் மீனாட்சிபுரம் உள்ளது. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், போலீசார் நேற்று (அக்.,.17) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனைமலை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில், காவல்துறையினர் பொள்ளாச்சி-மீனாட்சிபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சரக்கு ஏற்றி வந்த வாகனத்தை பிடித்து சோதனை செய்தனர். அதில் தவிட்டு மூட்டைகளுக்கு கீழ்ப்பகுதியில் வித்தியாசமான முறையில் மூட்டைகள் இருந்ததால், மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விற்பனைக்கு கடத்திச் சென்ற சுமார் ரூ.10,00,000/- மதிப்புள்ள 2 டன் எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.16,200/- பணம் மற்றும் 2 சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 5 நபர்களையும் பிடித்து விசாரித்தனர்.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மகன்களான அஜய் சதீஷ்(22), சத்யா (21), செல்லையா என்பவரது மகன் செந்தில் (43) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் அருள்குமார் (36), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் விக்னேஷ்(21) ஆகிய 5 நபர்களையும்
நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற போதை பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.