வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன் : பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் விவசாயிகளுடன் ஆலோசனை
வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை விவசாயிகள் கடன் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து தமிழக அரசு அறிவித்ததில், கிராம அளவில் உள்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வட்டி மானியத்துடன் கடன் வசதி செய்து தரும் வகையில், ஒன்றிய அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதி எனும் திட்டத்தினை அறிவித்துள்ளது. மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள் போன்ற அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான உட்கட்டமைப்புகளை இத்திட்டத்தின் கீழ் உருவாக்கலாம்.
மேலும், விவசாயிகள் குழுக்களாக இணைந்து, வேளாண்மை இயந்திர வாடகை மையம் துவங்குவதற்கும், சூரிய சக்தி மோட்டார் அமைப்பதற்கும், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன, துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் போன்ற பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் கடன் வசதி பெறமுடியும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை மூன்று சதவிகித வட்டி தள்ளுபடியுடன் கடன் பெறலாம். மேலும் ரூ.2 கோடி வரை பெறும் கடன்களுக்குக் கடன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது என் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஆனைமலையில் வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. இதில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஓடையகுளம், காளியாபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் பேசுகையில், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தலைவர், வாங்கி அதிகாரி, வேளாண் அதிகாரி, மற்றும் 2 நபர்களுடன் சேர்த்து, மொத்தம் 5 நபர்கள் இந்த திட்டத்தில் செயல்படுவார்கள். கிராமம் வாரியாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி விவசாயிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.மேலும், வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி உதவிகள் மற்றும் மானியம் பற்றிய தெளிவாக எளிதில் அறிந்துகொள்ளும்படி விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர், ஆனைமலை பகுதி வங்கி மேலாளர்கள், வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திமுக ஒன்றிய செயலாளர்கள் தேவசேனாபதி, கன்னிமுத்து, யுவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார், ஆனைமலை பேரூர் கழக செயலாளர் Dr.AP.செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.