தங்கும் விடுதிகளை முறையாக பதிவு செய்ய வேண்டும்: அரசு முக்கிய எச்சரிக்கை
ஆகஸ்ட் 04.,
தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் அனைத்து விடுதிகளையும் முறையாக பதிவு செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகளை முறைப்படி பதிவு செய்யவேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தங்கும் விடுதிகள் :
தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி குழந்தைகள் மற்றும் பெண்கள் அனைத்து விடுதிகளையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 18-வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதிகளை, மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்யவேண்டும். அதேபோல, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி, குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டியது மிக அவசியம். இந்தநிலையில் தற்போது, இணையதளம் வாயிலாக உரிமம் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டப்படி தங்கும் விடுதிகளை பதிவு செய்யப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மையில், கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளி தங்கும் விடுதியில், மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி மரணம் குறித்த வழக்கு விசாரணையில், மாணவி தங்கியிருந்த விடுதி அதாவது பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த விடுதிக்கு, அரசிடம் முறையாக அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்தப்பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, விடுதிகளுக்கு உரிமம் வழங்க கோரினால், விடுதிக்கு உரிமம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். அதன்பிறகே, அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளி சம்பவத்தை தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தங்கும் தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யவேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர் அறிவித்த அறிவிப்பின்படி, விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.