திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
ஆகஸ்ட் 03.,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, காதலித்து திருமணமான ஒரே மாதத்தில், இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள, வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் கலைசெல்வி (20) என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கலைச்செல்வியின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை செய்து, கலைச்செல்வியை அவரது விருப்பத்தின் பேரில் கணவர் கோபிநாத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த கலைச்செல்வி தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாய் வீட்டுக்குச் சென்ற பெண்ணை காணவில்லை என கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, அங்கும் காணவில்லை. இதனால், தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் இன்று காலை கலைச்செல்வி சடலமாக மிதந்துள்ளார். இதுகுறித்து, பெரியதச்சூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த ஊர் மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து,இறந்த கலைச்செல்வியின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெரியதச்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கலைச்செல்வியின் மரணத்திற்கு கணவர் கோபிநாத்தான் காரணம் என்றும், கோபிநாத்தை கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி, கலைச்செல்வியின் உறவினர்கள் மருத்துவ கல்லூரி முன்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உடனடியாக அங்கிருந்த காவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். மறியலால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காதலித்து திருமணமான ஒரு மாதத்தில், இளம் பெண் கிணற்றில் சலனமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.