அ.தி.மு.க., இடத்தில் அமர்ந்த ஓ,பி,எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.. டி.ஜெயகுமார் செய்த செயலால் சலசலப்பு
அ.தி.மு.கவை பொறுத்தவரை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரண்டு தரப்பினரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 01.,
தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.கவின் இரு அணிகளும் பங்கேற்றுள்ளன. இதில், அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அமர்ந்திருந்த நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அ.தி.மு.க பெயர் பலகையை தங்கள் பக்கம் நகர்த்தி வைத்துகொண்டார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கான கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், அக்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அ.தி.மு.கவை பொறுத்தவரை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரண்டு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அ.தி.மு.கக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகொண்டார்.
சில நிமிடங்கள் கழித்து எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் வந்தனர். அப்போது, அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கோவை செல்வராஜ் அமர்ந்திருப்பதை கவனித்த டி.ஜெயகுமார், அ.தி.மு.க பெயர் பலகை தங்கள் பக்கம் நகர்த்தி கொண்டார். இதனால், அங்கு சிறிதாக சலசலப்பு ஏற்பட்டது.

.jpg)