ஆனைமலையில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆனைமலை ஆகஸ்ட் 05.,
கோவை மாவட்டம், ஆனைமலையில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், ஆனைமலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் சார்பில் ரூ.3,05கோடி மதிப்பீட்டில் ஆனைமலையில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கப்பட்ட ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சார்- ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.லீலா அலெக்ஸ், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறையின் முக்கியத்துவம்
வருவாய்த்துறை மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவதிலும், முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான, பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கள், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்த துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலக கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகம் 1.54 ஏக்கர் பரப்பளவில் ரூ. 2.79 கோடி மதிப்பீட்டிலும், வட்டாட்சியர் குடியிருப்பு 26.19 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது. மேலும், அலுவலக கட்டடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஆகியவை 12,696 சதுர அடியில் வட்டாட்சியர் அறை, பதிவறைகள், அலுவலக அறைகள், கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிக்கான சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் நிகழ்ச்சியில், ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் மற்றும் ஆனைமலை திமுக பேரூர் கழக செயலாளர் மருத்துவர் ஏ.பி.செந்தில்குமார், திமுக ஒன்று செயலாளர் தேவசேனாதிபதி, கன்னிமுத்து மற்றும் ஆனைமலை அதிமுக கிழக்கு-மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ஜிகே சுந்தரம், கார்த்திக் கப்புசாமி, ஆனைமலை அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன், ஆனைமலை திமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரனிடம், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுமார் நூற்றி நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் சுமார் 1,200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மேலும், காலை மாலை என இரு வேளையில், பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி செய்து வருவதும், முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
தற்போது, பள்ளி மைதானத்தின் ஒரு பகுதியில், புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால், விளையாட்டு மைதானத்திற்கான இடம் குறைந்துவிட்டது.
மேலும் வட்டாட்சியர் அலுவலகம் இன்று முதல் திறக்கப்பட்டதால் அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும், பள்ளி மைதானத்திலேயே நிறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதனால், பள்ளி மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பள்ளியின் மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்கும்படி விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அரசு திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்து, கட்டிக் கொடுக்க வேண்டுமென ஆனைமலை பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனதில் கூறப்பட்டிருந்தது. மேலும், நடைபெற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆனைமலை தாசில்தார் பானுமதி செய்திருந்தார்.