EPS கழகத்தின் பொதுச்செயலாளர் என்றால் அம்மாவாகிய நான் யார்? நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு...
ஜூலை 28.,
நெல்லை ஆட்சியர் வளாகத்தைச் சுற்றியுள்ள சுவர்கள், வண்ணாரப்பேட்டை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி என்றால், அம்மாவாகிய நான் யார்? என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கேட்பதுபோல் நெல்லையை சுற்றியும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பானது. ஒற்றைத் தலைமைப் பிரச்சனை இன்னும் முடியாத நிலையில், இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை நீக்குவதும் சேர்ப்பதுமாக மோதல் தொடர்ந்து நீடிக்கிறது.
மேலும், இருவரும் மாறி மாறி அதிமுக நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்துக்கொண்டும் நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறார்கள். இவைகளையெல்லாம் கடைக்கோடியில் அதிமுக கொடியை கட்டும் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். எப்படிப்பட்ட கட்சி இராணுவ கட்டுப்பாடுகளுடன் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ந்த கட்சி தற்போது குரங்கு கையில் பூமாலை சிக்கியதுபோல சிக்கித்தவிக்கிறது.
மேலும் இ.பி.எஸ் தரப்பினர் ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து விதவிதமான முறையில் போஸ்டர்களை ஒட்டி வந்தால், ஓ.பி.எஸ் தரப்பினரோ இ.பி.எஸ்யை விமர்சித்து நூதனமான முறையில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லையைச் சுற்றி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், மறைந்த ஜெயலலிதாவே வந்து பேசுவது போலவே, கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
நெல்லை மாநகர் பகுதியைச்சேர்ந்த அதிமுக பெண் பிரமுகரான தமிழரசி, எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் போஸ்டர் ஓட்டி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் ஒட்டிய போஸ்டரும் வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அதில், இடைக்கால பொதுச்செயலாளராகிய எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேள்வி கேட்பது போல் போஸ்டர் ஒட்டியுள்ளார். இ.பி.எஸ் கழகத்தின் பொதுச்செயலாளர் என்றால், அம்மாவாகிய நான் யார்? என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

.jpg)