பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஜூலை 27.,
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுப்பு எடுக்கும் முறை தொடர்பான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், ஊதியம் இல்லாத அசாதாரண விடுப்பு குறித்தான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆகியவற்றில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்களும் விடுப்பு எடுக்க நேரிட்டால் உயர் கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகுதான் விடுப்பு எடுக்க முடியும். அதாவது, மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் மற்றும் பிற தேவைகளுக்கு எழுத்து மூலமாக உயர் அலுவலர்களிடம் அனுமதி பெறவேண்டும்.
ஆனால், சில சமயங்களில் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கடந்த மே 25ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். அதாவது, ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் முறைக்கு பதிலாக, பள்ளிக் கல்வித்துறை செயலி மூலமாக விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, TNSED-Schools என்ற செயலி மூலம் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட விடுப்புகளை ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரும்போது தங்களது வருகை பதிவை பள்ளிக் கல்வித்துறையின் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊதியம் இல்லாத அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையரகம் தற்போது பதிலளித்துள்ளது.

.jpg)