பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு 25,000 அபராதம்- சிறை
பள்ளி மாணவர்கள் விதிமுறைகளை மீறி ஓட்டுநர் உரிமம் வாங்காமல் வாகனம் ஓட்டினால், வாகனம் ஓட்டிய அந்த மாணவனின் பெற்றோர்களுக்கு ரூ.25,000 அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என திருப்பூர் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவனின் பெற்றோர்களுக்கு அபராதம்:
தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவதால் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே, முறையாக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களை இளைஞர்கள் ஓட்ட முடியும். ஆனால், தற்சமயம் பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகள் மீறி ஓட்டுநர் உரிமம் பெறாமலே இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள் .
இதனால், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களே வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத விதமாக சாலை விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. என்னதான் பள்ளி மாணவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு அளித்தாலும் கூட, அந்த விதிமுறைகளை எந்த மாணவர்களும் கடைபிடிப்பதில்லை. இதனை உடனடியாக தடுக்கும் வகையில் திருப்பூர் போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து, திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு '199' ஏ’ன் படி ஓட்டுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டினால், அந்த வாகனத்தை ஒட்டிய பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25,000 அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது சட்டம். மேலும், 25 வயது வரைக்கும் சம்மந்தப்பட்டவர் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்றும், அந்த வாகனத்தை 12 மாதங்கள் இயக்க கூடாது என்பதும் சட்டமாகும். இந்தச் சட்டத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என திருப்பூர் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

.jpg)