வால்பாறையில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருண்யா சமூக சேவை மையத்தில், குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி காவல்துறை சார்பில் நடைபெற்றது.
இதில், தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் காவலன் செயலி குறித்தும் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் எடுத்துரைத்தார்.
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை கூறினார். போற்றுதலுக்குரிய பிறப்பாக கருதப்படவேண்டிய பெண்களை கேலிகள், கிண்டல்கள், பாலியல் வன்கொடுமை என்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இன்றைய பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக், எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் பச்சேந்திரிபால், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, பாட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெய்வால், பி.வி.சிந்து என பெண் சாதனையாளர்கள் இல்லாத துறைகளே கிடையாது.
காவல்துறையிலும் பெண்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். பெண்களை பாதுகாக்க வரதட்சணை ஒழிப்புச்சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பாதுகாப்புச்சட்டம், விபச்சார தடுப்புச்சட்டம் என பெண்களின் பாதுகாப்புக்கென பலதரப்பட்ட சட்டங்கள் உள்ளன. இவற்றின் கீழ் அளிக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை.
குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பெண்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 181, 1091 என்ற எண்ணை பயன்படுத்தி பெண்களின் உதவி அழைப்பு மையத்தையும், அதேபோல், 1098 எண் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி குழந்தைகள் உதவி அழைப்பு மையத்தையும் அணுகி புகார்களை பதிவு செய்யலாம். இப்படி பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வாழ்க்கையில் அனைவருக்குமே தேடல் இருக்கும். எதையாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புவோம். அதற்கு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் அவசியம். கடின உழைப்பும், ஊக்கமும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். எப்போதும் உயர்வானதை எண்ணுங்கள். ஒவ்வொரு வரும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக்கொண்டு அதை அடையும் வகையில் கனவு காண வேண்டும். தற்காலிக, நீண்டகால குறிக்கோள்களை அடைய கால நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.
உலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மை பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்ப காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.
கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்கு பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பதை, உலகறிந்த உண்மை. சமூகத்தில் பல்வேறு வகையான வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடுபவர்கள் பெண்கள் தான் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சி பாதையில் சமுதாயத்தை இட்டுச்செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ, நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரோடும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆண்களின் ஆதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர்.
ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லாததே. பெண்கள் பாதுகாப்பில் காவல்துறை எப்போதும் துணை நிற்கும் என்று கூறினார்.
