கொடநாடு வழக்கு: சசிகலா உள்பட 220 பேரிடம் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பாதுகாப்பில் இருந்து காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது.
இதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள், விபத்தில் இறந்த கனகராஜின் உறவினர்கள், பங்களாவில் வேலை பார்த்த ஊழியர்கள், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் என பலரிடமும் விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினர்.
கடந்த வாரம் கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், கொடநாடு பங்களா பற்றி அறிந்தவருமான சசிகலாவிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2 நாட்களும் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.
இந்த விசாரணையில் சசிகலாவிடம் கொடநாடு பங்காளவில் என்னென்ன இருந்தது? காணாமல் போன பொருட்கள் எவை? என்று 100-க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர். சசிகலாவும் தெரிந்த தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தார். இதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
இந்தநிலையில், ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜரானார்.
இந்தவழக்கில் கைதாகி தற்போது, ஜாமீனில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோரும் விசாரணையையொட்டி நீதிமன்றம் வந்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஸ்ரீதரன் கொடநாடு வழக்கை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், கொடநாடு சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுவரையில் வி,கே.சசிகலா உள்பட 220 பேரிடம் இந்த வழக்கு தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

.jpg)
