மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள்: - இந்த எண்ணுக்கு அழைக்கலாம்! -அமைச்சர் செந்தில் பாலாஜி
மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க மின்னகம் 94987 94987 என்கிற எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவுமுதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அண்ணாசாலையில் இயங்கும் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடை இருக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள 223 துணைமின் நிலையங்களில் ஒரு மின் நிலையத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
முன்னெச்சரிக்கை காரணமாக 27 விழுக்காடு நுகர்வோருக்கான மின் இணைப்பு மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம், வள்ளுவர் கோட்டம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பழுதை சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சீரமைக்கப்படும். தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த அளவு பாதிப்பும் ஏற்படவில்லை.
மின்சாரத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. அது மாதிரியான சம்பவங்கள் நடைபெற கூடாது. உயர் அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் புகார்கள் அடிப்படையில் தயார் நிலையில் இருப்பதால், உடனுக்குடன் பிரச்னைகள் சரிசெய்யப்படும்.
மின்பாதிப்பு - புகார்
ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. அதே போல் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். 1508 புகார்கள் மின்னகம் மூலம் வந்துள்ளது. 607 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 907 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரான மின் விநியோகம் அளிக்கப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்டால் மின்னகம் 94987 94987 என்கிற எண்ணுக்கு உடனடியாக புகார்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

