அதீத மழை பெய்யும்: மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நவம்பர் 9, 10, 11, 12 தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியால், அதீத மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நவம்பர் 9,10ஆம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கியது. தெற்கே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 27ஆம் தேதி உருவானது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 தினங்களுக்கு மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இதனால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி குறித்து, வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழ்நாடு நோக்கி நகரும். இதனால், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நவம்பர் 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடிக்கசென்ற மீனவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்குள் கரை திரும்பவேண்டும். வட தமிழகத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியால், அதீத மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தொடர்ந்து புயலாக மாறும். இந்த புயல் சூப்பர் புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்பதை வானிலை ஆய்வு மையம் கூர்ந்து கவனித்து வருகிறது.