மக்கள் சபை கூட்டம்: ஆனைமலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு
ஆனைமலை நவ 07.,
அரசு சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சபை என்ற தலைப்பில், மக்களிடம், அவர்களது கோரிக்கை அடங்கிய மனுக்கள் சேகரித்து செயல்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சி பகுதிகளில், மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், மின்சார மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று, மக்களிடம் மனுக்கள் சேகரித்தார். மூன்று பேரூராட்சிகளில், 780க்கும் மேற்பட்ட மனுக்கள் சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: கோவையில் நடந்துவரும் மக்கள் சபை நிகழ்ச்சிகள் வாயிலாக இதுவரை, 15,127 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்க வலியுறுத்தி அதிக மனுக்கள் வந்துள்ளன. விவசாயிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். கடந்த ஆட்சியில் அதிமுகவினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததால், கோவை மாவட்டத்தில், அதிக அளவிலான மக்கள் மனுக்கள் தரவந்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை துவங்கி இருப்பதால், மின்வாரியம் பேரிடரை சமாளிக்க தயாராக இருக்கிறது. ஒரு லட்சம் மின் கம்பங்கள் தாயார் நிலையில் உள்ளது. தடையின்றி மின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரியத்தில், 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. விரைவில் அவை காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என, ஆனைமலையில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதையடுத்து, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த, பொள்ளாச்சி அடுத்த ஆத்துப்பொள்ளாச்சி பழங்குடியின மாணவன் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து மருத்துவ துறையில் மென்மேலும் பல சாதனை படைத்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்.