மக்கள் சபை கூட்டம்: வால்பாறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்
கோவை நவ 07.,
அரசு சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சபை என்ற தலைப்பில், மக்களிடம், அவர்களது கோரிக்கை அடங்கிய மனுக்கள் சேகரித்து செயல்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில், மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மின்சார மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று, 800க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடத்தில் நேரில் சென்று பெற்றுக் கொண்டார். மேலும், பழங்குடியின மக்கள் 20 குடும்பங்களுக்கு இலவச பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
கோவையில் நடந்து வரும் மக்கள் சபை நிகழ்ச்சிகள் வாயிலாக இதுவரையில், 15,127 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், அதிக மனுக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்க வலியுறுத்தி வந்துள்ளன. வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பள உயர்வு விரைவில் கிடைக்கும். தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொழில் வரியை, முதலமைச்சரிடம் பேசி தொழில் வரியை முழுவதுமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அரசு செய்த முறைகேடுகளால் வால்பாறை முழுவதும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொகுதி எம்பி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் வரதராஜன், வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் மற்றும் வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், வால்பாறை நகராட்சி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வால்பாறை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.