ரியல் ஜெய் பீமாக களத்தில் இறங்கி முதலமைச்சர் ஸ்டாலின்: நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி நெகிழ்ச்சி
4.5 கோடி செலவில் 252 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அங்க உதவிகளை பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிச் சான்றிதழ்,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது இருளர் இன மக்களுக்கு வங்கி கடன் உதவியும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த உதவிக்கு, அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக வரவேற்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு தீபாவளித் திருநாளான இன்று அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரில் சென்று அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண், கோவில் அன்னதானத்தில் சாப்பிட சென்றபோது, அங்கிருந்த சிலர், அவரை தடுத்ததுடன் பந்தியில் அமரக்கூடாது அனைவரும் சாப்பிட்ட பிறகு மீதி இருந்தால் தருகிறோம் எனக்கூறி அவமானப்படுத்தினர், இதனையடுத்து, அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியாக கொடுத்திருந்தார்.
அந்த யூடியூப் பதிவில், எங்கள் சமூகம் படித்திருந்தால் நாங்களும் நல்ல உடை அணிந்திருப்போம். இதுபோல பொது இடத்தில் அவமானப்பட வேண்டி இருக்காது என்று கூறியிருந்தார். இந்த தகவல் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றது. உடனே மறுநாள் அந்தக் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
அப்போது, அமைச்சருக்கு அந்த பெண் அவர்கள் சமூக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்திருந்தனர். அதேபோல, மற்றொரு காணொளியை அந்தப்பெண் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க அரசு உதவவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதை பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்திற்கு தேவையான வசதிகளை செய்துதர உத்தரவிட்டார்.
அதற்கான ஏற்பாடுககளை அதிகாரிகள் தீவிரமாக செய்துவந்த நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று மாமல்லபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்சென்று 57 நரிக்குறவர்கள் 24 இருளர் குடும்பங்களுக்கு இன்று வீட்டுமனை பட்டா வழங்கினார். மொத்தத்தில் 81 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு பயிற்சி ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினார். 252 பேருக்கு 4.5 கோடி செலவில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, பழங்குடியின மக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க தங்கள் நன்றியினை தெரிவித்தனர். அப்போது, நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த அஸ்வினி தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ந்தார். இதையடுத்து மேடையில் பேசிய அந்த பெண், நாங்கள் எங்களுக்கு யாருமே இல்லையென்று எண்ணியிருந்தோம். ஆனால், நாங்கள் இருக்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நேரில்வந்து வீட்டுமனை பட்டா, எங்கள் பிள்ளைகள் படிக்க உதவிகளை செய்திருக்கிறார்.
நாங்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று எங்கள் கையில் சாதிச் சான்றிதழை கொடுத்திருக்கிறார். இதன்மூலம் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் கண்ணீர் மல்க கூறினார். நாங்கள் இந்த நன்றியை உயிருடன் உள்ளவரை மறக்க மாட்டோம் என்று கூறினார்.
பழங்குடியின மக்களுக்கு நேரும் அநீதியை கண்முன் நிறுத்தியுள்ள "ஜெய் பீம்" படத்தை பார்த்துவிட்டு, அப்படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், இன்று ரியல் ஜெய் பீமாக களத்தில் இறங்கி பழங்குடி மக்களுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சி பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.
இதேபோல, இரண்டு வார காலத்திற்குள் தமிழ்நாடு முழுவதும், இந்த மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். இவைகளையெல்லாம் செய்யும்போழுது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது. பெரியார்,அண்ணா,கலைஞர் ஆகியோரை மூவரையும் நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
— M.K.Stalin (@mkstalin) November 4, 2021
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு. pic.twitter.com/JdDML6a9S3