வாரத்தில் ஒரு நாள் விடுமுறை: முதலமைச்சருக்கு பரிசளித்து நன்றி தெரிவித்த காவலர்கள்
காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு காவலர்களுக்கு அரசு சார்பில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில், காவல் துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பரிசளித்து தங்களின் நன்றி தெரிவித்தனர்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதியன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.
அப்போது, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்' என்று அறிவித்திருந்தார்.
இதனைச் செயல்படுத்தும் விதமாக, இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்டார்.
இந்நிலையில், காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (நவ. 6) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.