நீட் தேர்வில் பழங்குடியின மாணவி தேர்ச்சி: நேரில் சென்று பாராட்டி லேப்டாப் வழங்கிய அமைச்சர் கயல்விழி
நீட் தேர்வில் 202 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த பழங்குடியின மாணவி சங்கவிக்கு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மடிக்கணினி வழங்கி பாராட்டினார்.
கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் ரொட்டிகவுன்டனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கவி. மலசர் என்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி சங்கவிக்கு, சாதி சான்றிதழ் உட்பட எந்த ஆவணங்களும் இல்லாததால் சிரமப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு ஊடகங்களிலும் இந்த செய்தி வெளிப்படுத்தியது. இதையடுத்து, இந்த கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தது.
இந்தநிலையில், சங்கவிக்கு படிக்க வைக்க சில தொண்டு நிறுவனங்களும் உதவிசெய்ய முன் வந்தனர். இதையடுத்து, மாணவி சங்கவி நீட் தேர்வில் 202 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
சங்கவிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, இன்று மாணவியை நேரில் சந்தித்தார்.
அப்போது அவர் படிக்க மடிக்கணினி ஒன்றை வழங்கிப் பாராட்டினார். இதனையடுத்து, அந்த பகுதி குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி, பொதுமக்களிடம் தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.