Type Here to Get Search Results !

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கூடுதலாக ஒருநாள் விசாரணை நீட்டிப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கூடுதலாக ஒருநாள் விசாரணை நீட்டிப்பு!


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய தனபாலிடம் காவல் துறையினர் பத்து நாள் விசாரணை நடத்திய நிலையில் கூடுதலாக ஒருநாள் கேட்ட நிலையில் உதகை நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்துள்ளது.


நீலகிரி: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூல காரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் விபத்தில் உயிரிழந்தார்.


இந்த வழக்கையும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினரான ரமேஷ் ஆகிய இருவரிடமும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் கோடநாடு கொள்ளை சதித் திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் விசாரணையில் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட குற்றத்திற்காக, 4 பிரிவுகளின் கீழ் தனபால், உறவினர் ரமேஷை கடந்த 25ஆம் தேதி கைதுசெய்து தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளைச் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.


10 நாள்கள் காவலில் இவர்கள் இருவரையும் விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து,  இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தனபாலிடம் பத்து நாள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று (நவ. 5) குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.


மேலும், காவல் தரப்பில் கூடுதலாக 5 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி தனபாலுக்கு ஒருநாள் கூடுதல் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தனபாலை பாதுகாப்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies