பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை: 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பொள்ளாச்சி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான மாரிமுத்து மகன் மகரஜோதி என்பவன் பழக்கமாகி உள்ளான். பழக்கமானது நாளடைவில் அந்த சிறுமியை காதல் செய்வதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகூறி பலாத்காரம் செய்துள்ளான்.
அதன்பிறகு, மகரஜோதி சிறுமியை பலாத்காரம் செய்தது குறித்து, தனது நண்பர்களான முத்துக்குமரன், பிரவீன் குமார், ஜெயப்பிரகாஷ், நாகராஜ், ஆகியோரிடம் தெரிவித்துள்ளான். இதனையறிந்த, மகரஜோதியின் நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தநிலையில், சிறுமியை 17 வயதான சிறுவன் ஒருவனும் காதலித்து வந்துள்ளான். அந்த சிறுவனும், சிறுமியை கற்பழித்ததால், சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த அனைத்து உண்மையும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை சீரழித்த 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் 6 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவர்களை கைது செய்தனர்.
மேலும், பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று, கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், டிஎஸ்பி தமிழ்மணி ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை அளித்தனர்.
இதையடுத்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரான் உத்தரவின் பேரில் இன்று மாணவியை பலாத்காரம் செய்த மகரஜோதி, நாகராஜ், முத்துக்குமரன், ஜெயப்பிரகாஷ், பிரவின்குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.