கோவை மாவட்டத்தில் 2,064 பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ உதயநிதி !!
கோவை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மொத்தம் 2,064 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, 586 நாட்களுக்கு பிறகு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கியது.
இதையடுத்து, மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகள் என மொத்தம் 1,208 பள்ளிகள் உள்ளது. இதில், 780 பிரைமரி பள்ளிகளில் 51,856 பேர், 232 நடுநிலைப்பள்ளியில் 39,961 மாணவர்கள், 113 மேல்நிலைப் பள்ளியில் 75,461 மாணவர்கள் மற்றும் 83 உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 17,127 மாணவர்கள் என மொத்தமாக ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 805 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள்.
இந்தநிலையில், இவர்கள் தவிர 178 அரசு உதவிப்பெறும் பள்ளிகள், 3 ஒன்றிய அரசின் மேல்நிலைப் பள்ளிகள், 675 தனியார் பள்ளிகள் என்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,064 பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 508 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கு முன்னதாகவே, 9ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து நடந்து வருகிறது. இந்தநிலையில், இன்றுமுதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தபின் வகுப்பறையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியம் பெத்தாநாய்க்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி மாணவர்களை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்களுடன் இருவரும் கலந்துரையாடல் நடத்தினர்.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது குறித்து ஆய்வு செய்தனர். காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்ததாலும் முதல் நாள் என்பதால் பள்ளிகளுக்கு மிக குறைவான மாணவர்களே வந்தனர். வகுப்பறையில் மாணவர்களை சமூக இடைவெளி கடைப்பிடித்து அமர வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், மாணவ, மாணவிகளின் மனநிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 15 நாட்களுக்கு பள்ளியில் பாடங்களுக்கு பதிலாக, வாய்மொழி பயிற்சி, கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டு, மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளனர்.
அதன்பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உலகப் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.