Type Here to Get Search Results !

திரையரங்கில் 100% இருக்கை வசதி: எதிர்த்து தொடரப்பட்ட வழக்குத் தள்ளுபடி!

திரையரங்கில் 100% இருக்கை வசதி: எதிர்த்து தொடரப்பட்ட வழக்குத் தள்ளுபடி!  


தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கையைப் பயன்படுத்த அனுமதியளித்த உத்தரவை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.


அதன் தொடர்ச்சியாக நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கையைப் பயன்படுத்த அனுமதியளித்து, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைக்கு அனுமதியளித்தால், தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், ரசிகர்கள் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றமாட்டார்கள் எனவும் மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.



தள்ளுபடியான வழக்குஇந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிபுணர்களின் ஆலோசனைப்படி, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகே அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதில் தலையிட முடியாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும், மீன் சந்தைகளில் இருப்பதைப் போல திரையரங்குகள் இருக்காது எனவும், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தனி மனித விலகலைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வழிகாட்டு விதிகளை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


பண்டிகை காலங்களில் கரோனா தாக்கம் அபாய அளவைத் தாண்டிவிடவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாமல் இதுபோல வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தக்கூடாது எனவும் மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாநில அரசு கரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் சூழலை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies