காட்டு யானைகளால் சூறையாடப்படும் ரேஷன் கடைகள் : வால்பாறையில் நடமாடும் ரேஷன் கடை வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
வால்பாறை அக் 20.,
கோவை மாவட்டம், வால்பாறையில் ரேஷன் கடைகளில் நுழையும் காட்டு யானைகள் அத்தியாவசியப் பொருட்களை சேதப்படுத்தும் சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது.
நேற்று இரவு 2 மணி அளவில் தாய்மடி எம்.டி டிவிஷன் ரேஷன் கடையை 3 காட்டு யானைகள் சூறையாடியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து யானையை விரட்டினார்கள். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை விரட்டினார்கள். இதனால் அந்தப்பகுதி பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், நடமாடும் ரேஷன் கடை வசதியை கொண்டு வரவேண்டும் என்பதே வால்பாறை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வால்பாறையில் 48 ரேஷன் கடைகளில் செயல்படுகிறது. அதில் 3 கடைகள் மட்டும் நகரப் பகுதியில் செயல்படுகிறது. மீதமுள்ள ரேஷன் கடைகள் எஸ்டேட் பகுதிகளில் செயல்படுகிறது. வால்பாறையில் மொத்தம் 17,335 ரேஷன் கார்டுகள் மூலமாக, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தாய்முடி, சின்கோனா, கெஜமுடி, கருமலை, பன்னிமேடு, நல்லமுடி, ஹைபாரஸ்ட், பெரியகல்லாறு, மாணிக்கா எஸ்டேட் பகுதிகளில் அதிகமாக காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும்.
இதையடுத்து, பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களில் முகாமிடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் ரேஷன் கடை பகுதிகளில் நுழைந்து, ரேஷன் கடைகளை இடித்து சேதப்படுத்துகின்றன. காட்டு யானைகளால் பல லட்சம் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் சேதமடைகிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் முறையாக ரேஷன் பொருட்களை வழங்க முடியாதநிலை உருவாகிறது.
மாதத்தில் ஒரு நாள் மட்டுமே எஸ்டேட் பகுதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றது. இதனால், ரேஷன் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால், காட்டு யானைகள் நடமாடும் பகுதிகளில் ரேஷன் பொருட்களை விநியோகிக்க, நடமாடும் ரேஷன் கடைகளை கொண்டு வரவேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.




