கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரத்தில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. மீனாட்சிபுரம் அருள்மிகு மகாசக்தி மாகாளியம்மன் திருக்கோவிலில் கண்ணைக் கவரும் வகையில் கொலு அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் அருள்மிகு மகாசக்தி மாகாளியம்மன் திருக்கோவில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. கோயிலில் கண்ணைக் கவரும் வகையில் கொலு அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
கொலு அலங்காரத்தைப் பார்க்க உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மக்கள் மாகாளியம்மன் திருக்கோவிலுக்கு வந்து கொலு அலங்காரத்தைப் பார்த்து மகிழ்ந்தும் வணங்கியும் செல்கின்றனர்.
நவராத்திரியின் ஒன்பது நாள்களும் முப்பெரும் தேவியருக்கும் உரித்தானது. அதன்படி நவராத்திரி விழாவில் ஆரம்ப மூன்று நாள்கள் வீரத்தையும் மனதில் தைரியத்தையும் வரவேண்டி, அம்மன் துர்கையை வழிபடவேண்டும்.
நேற்று முதல் நவராத்திரி தொடங்கிவிட்டது. கொலு வைக்கிற பழக்கமுடையவர்கள் வீட்டில் அனைத்து பொம்மைகளும் வைத்து கொலு வைத்திருப்பார்கள். கொலு வைத்துள்ள வீடுகள் லட்சுமி கடாட்சமாக இருக்கும்.
புரட்டாசி மாதத்தில் அம்பிகை அசுரனை வதம் செய்த காலத்தில் ஏன் கொலு வைக்கிறோம் என்பதை பார்ப்போம்.
சுரதா என்ற ஒரு அரசர் அண்டை நாட்டு அரசரால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். அடிக்கடி தனது நாட்டின் எல்லையை மீறி பொதுமக்களுக்குத் தொல்லைகள் தந்துவந்த அண்டை நாட்டு அரசனை ஒடுக்க தன்னுடைய குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டான். அதன்படி குரு கூறிய ஆலோசனைப் படி, நவராத்திரி நாள்களில் அம்பிகையை வழிபட சித்தமானான். இதையடுத்து, குரு சுமதா கூறியபடி ஆற்றின் களிமண்ணை எடுத்து, அம்பிகையின் உருவத்தை செய்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து கடுமையான விரதம் இருந்து வேண்டினான்.
விரதம் இருந்து வேண்டியதன் காரணமாக, அம்பிகை மனம் மகிழ்ந்து அவனது படைபலம் பெருக ஆலோசனை கூறினாள். அதன்படி களிமண்ணால் யானைகள், குதிரைகள், தேர்கள், வீரர்கள், போர்க் கருவிகள் அனைத்தும் செய்து அம்பிகை கூறிய மந்திரத்தை சொல்லி வேண்டியதும் அவை எல்லாம் நிஜமாகின. இந்தநிலையில் இந்த படையைக்கொண்டு எதிரிகளை வென்று சுரதா நிம்மதி கொண்டான் என்கிறது புராணம்.
இதில் புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி சிறப்பானது. அம்பிகை அசுரர் சக்திகளை கொன்று அழித்த புனித காலம் எனப்படுகிறது. மேலும், புரட்டாசி மாதத்தில் யமனின் கோரை பல் என்று அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே, இந்த மாதத்தில் யமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி கொண்டாடப்படுகிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.







