கோவை அக்.08.,
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் கலையரசி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கலையரசி. இவர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். காவல் ஆய்வாளர் கலையரசி பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நேற்று காவல் ஆய்வாளர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, உத்தரவு நகல் காவல் ஆய்வாளர் கலையரசிக்கு கொடுக்கப்பட்டது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் கலையரசியின் வீடு உள்ளது. பணியிட நீக்கம் செய்த உத்தரவு தகவலை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கலையரசி மன உளைச்சலில் இருந்துள்ளநிலையில், நேற்று மாலை உடலில் மண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நல்லவேளையாக குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கலையரசியை காப்பாற்றினார்கள்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் கலையரசி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

