தாய் பெயரை மகளுக்கு இனிஷியலாக வைக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி
தனது பெயரின் முதல் எழுத்தை மகளின் இனிஷியலாக பயன்படுத்த அனுமதிக்கக்கோரி தாய் அளித்த மனுவுக்கு 30 நாள்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த போதும்பொண்ணு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், என் மகள் காவ்யா, கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். எனது கணவர் விட்டுச்சென்ற நிலையில் நானும் எனது மகளும், என் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறோம்.
நான் மிகவும் கடினப்பட்டு கூலி வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம். இந்நிலையில், என் மகள் காவ்யாவை பள்ளியில் சேர்த்தபோது எனது பெயரின் முதல் எழுத்தை அவரது இனிஷியலாக பதிவு செய்தோம்.
இதையடுத்து, தகுதி தேர்வின் அடிப்படையில் அரசு உதவித்தொகை வழங்குவதை அறிந்த என் மகள் காவ்யா, அதற்கான தேர்வினை எழுத முயன்றபோது, தந்தையின் பெயரின் முதல் எழுத்தை காவ்யாவின் இனிஷியலாக வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், என் மகளுக்கு மனவுளைச்சலுக்கு ஆளான உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
என்னுடைய பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்தித் தேர்வு எழுத அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கோரியபோது, பள்ளி நிர்வாகம் அதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டதோடு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போதும், இதே பிரச்சினை வரக்கூடும். எனவே, என்னுடைய பெயரின் முதல் எழுத்தை எனது மகள் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, காவ்யாவின் சான்றிதழில்களில் தாய் பெயரின் முதல் எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநரும், அரசு தேர்வுத் துறையின் உதவி இயக்குநரும் மனுதாரரின் மனுவை, 2003-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் பரிசீலித்து 30 நாள்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.