சென்னை அக். 06.,
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும். புலம்பெயர்ந்த 13 தமிழர் பிரதிநிதிகளை கொண்டு, புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும். 20 கோடி ரூபாய் செலவில் புலம்பெயர் தமிழர் நல திட்டங்களுக்காக ஓதுக்கீடு செய்யப்படும்.
எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குத் தமிழ்நாடுதான் தாய்வீடு. அன்பு செலுத்துவது மட்டுமில்லை, அவர்களை அரவணைத்து செல்லவும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும். தமிழினம்தான் உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழுகிற இனமாக இன்னுமும் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு சென்றுவாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, உதவி செய்ய அரசு முன்வந்துள்ளது.
தமிழர் சங்கங்களோடு இணைந்து ஜனவரி 12-ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். இதையடுத்து, பல்வேறு நாடுகளுக்கு சென்றுவாழும் புலம்பெயர் தமிழர் குறித்த தரவுதளம் ஏற்படுத்தி, அதில் பதிவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவினர் வெளிநாடுகளில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், சென்னை மற்றும் 8 மாவட்டங்களில் வெளிநாடு பயண பற்றிய புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். பல்வேறு நாடுகளுக்கு சென்றுவாழும் தமிழர்கள் ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி, வலைதளம், செயலி ஆகியவை அமைத்து தரப்படும். மேலும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக சட்ட உதவி மையம் அமைக்கப்படும். கொரோனா காரணமாக நாடு திரும்பியவர்கள் குறுதொழில் செய்வதற்காக ரூபாய் 2.5 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


