பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த அமுதா ஐஏஎஸ் மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்பி வருகிறார்.
1994-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பி.அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்ப, மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. அமுதா தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் பல தடைகளை தகர்த்து சாதித்தவர் என பெயர் பெற்றவர்.
கோபிச்செட்டிபாளையத்தில் சார் ஆட்சியராக இருந்த அமுதா, சந்தனக் கடத்தல் வீரப்பன் சுதந்திரமாக உலவிய காலகட்டத்தில், அடர்ந்த காடுகளுக்குள் சென்று உள்ளூர் மக்களை சந்தித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். மதுரையை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து பலரது பாராட்டையும் பெற்றார்.
முன்னாள் முதலமைச்சர்கள் செல்வி.ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி மறைந்தபோது இறுதிச் சடங்கை கையாளும் பொறுப்பு அமுதா ஐ.ஏ.எஸ்சிடம் வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு நடவடிக்கையிலும் நிகழ்வுகள் நிறைவுபெறும் வரை சிறப்பாக நடத்தி முடித்தவர் அமுதா ஐ.ஏ.எஸ். அனைவராலும் பாராட்ட பெற்றவர் அமுதா ஐ.ஏ.எஸ்.