நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் 4 மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும், வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் தப்பியது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் 4 மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற டி23 புலியை பிடிக்கும் பணி 20 நாட்களைக் கடந்து விட்டது. நேற்று இரவு மசினக்குடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதாகி நின்ற வாகனத்தை சரிசெய்து கொண்டிருந்த நபர்களை நோக்கி புலி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த, தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் விரைந்தனர்.
இதையடுத்து, வனத்துறையின் மருத்துவக் குழுவினர் இரவு 10 மணி அளவில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஒரு ஊசி மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், புலி மயங்கி விழாமல் அடந்த காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டது. இந்தநிலையில், புலி பதுங்கிய வனப்பகுதியில் மசினகுடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகள் ஸ்ரீநிவாசன் மற்றும் உதயன் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை இரவு 2 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க இயலாததால், தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், மயக்க ஊசி புலிக்கு செலுத்தப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்படி, புலிக்கு மாலை 6 மணிக்கு மேல் மயக்க ஊசி செலுத்தக்கூடாது என்ற உத்தரவை மீறி, இரவு 10 மணிக்கு புலிக்கு மயக்க ஊசி செலுத்தியது ஏன் என வன உயிரின ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.