வால்பாறை அக் 12.,
வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதிகளில், பகுதிநேர நுலகம் திறக்க வேண்டும் என்று வாசிக்க விரும்பும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகளில், 52 தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளது. வால்பாறை நகரில் தேயிலை தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு கலைக் கல்லூரி துவங்கப்பட்டுது. அரசு கலைக் கல்லூரியில், சுமார் 1200 மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்போது, தேயிலை தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற பெருமையுடன் உயர்கல்வி கற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
மேலும், படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ள வால்பாறை நகரில், நூலகத்துறை மூலமாக நூலகம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதைப் போலவே அட்டகட்டி, காடம்பாறை, சோலையார்டேம் ஆகிய பகுதிகளிலும் நூலகத்துறை சார்பாக, பகுதிநேர நூலகம் செயல்படுகிறது.
இருப்பினும், பெரும்பாலான தேயிலை எஸ்டேட்களில் நூலகங்கள் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வந்து, வால்பாறை நகரில் உள்ள நூலகத்தையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும், மாணவர்கள் பல்வேறு போட்டித்தேர்வுக்காக படிக்க, வால்பாறை நகரில் உள்ள நூலகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
இது பற்றி வாசகர்கள் தெரிவிக்கையில், தேயிலை எஸ்டேட்களில் படித்த இளைஞர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இருப்பினும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் முடீஸ் பஜார், கருமலை பஜார், ரொட்டிக்கடை, சின்கோனா, வாட்டர்பால்ஸ் பகுதிகளில் பகுதிநேர நூலகம் அமைப்பதற்கு நூலகத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
