கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உள்ள திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக கோட்டையில் திமுக கொடி பறக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்தில் உள்ளது திவான்சாபுதூர் ஊராட்சி. வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் திவான்சாபுதூர் ஊராட்சி.
இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் பெண் வாக்காளர்கள் 4,415 உள்பட 8.556 வாக்காளர்கள் உள்ளனர். அதாவது திவான்சாபுதூர் ஊராட்சி 10 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள்தொகையை கொண்டது.
இதில் தி.மு.க வேட்பாளர் கலைவாணி 4372 வாக்குகளும், அதிமுக வேட்பாளார் சரோஜினி 2075 வாக்குகளும் பெற்றனர். 105 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் கலைவாணி அதிமுக வேட்பாளர் சரோஜினி விட 2297 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரி சாய் ராஜ் சுப்பிரமணியமிடம் கலைவாணி வெற்றி பெற்றதுக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
இந்த திவான்சாபுதூர் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளரே வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தனர.
இதையடுத்து, கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திவான்சாபுதூர் ஊராட்சிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் கலைவாணி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுகவைச் சேரந்த சரோஜினி போட்டியிட்டார். இவர்கள் இருவரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மரு.வரதராஜன், திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஆனைமலை வடக்கு ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் O.V.S.தேவசேனாதிபதி, ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் A.R.V.சாந்தலிங்ககுமார் கழக மாவட்ட, ஒன்றிய, நகர,வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து, வீடு வீடாக சென்று கலைவாணிக்காக வாக்கு சேகரித்தனர்.
இன்றடைந்த வெற்றி மூலமாக கொங்கு மண்டலத்தில் இனி வரும் காலங்களில் நடக்க இருக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும், அதில் நிச்சயமாக திமுக கழகம் வெற்றி பெறும் என்று திமுகவினர் சூளுரைத்தனர்.
இந்த தேர்தலில் வென்ற திமுக ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி, சாலை வசதி, கழிப்பிட வசதி கழிவுநீர் கால்வாய்கள், தூய குடிநீர், வீட்டு மனை பட்டா உள்ளிட்டவற்றை செய்து தருவார் என மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாக கூறுகிறார்கள்.











