அஇஅதிமுகவின் 50 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில் வரும் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலத்தை ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்துவரும் நிலையில் மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு வரும் 16-ஆம் தேதி சென்று சசிகலா மரியாதை செலுத்தப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. சசிகலா எம்ஜிஆர் இல்லத்திற்கு 17-ஆம் தேதி செல்லப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலறிந்த அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், சசிகலாவின் அரசியல் வருகை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவை எஃகு கோட்டையாக உருவாக்கி காப்பாற்றினார். அவருக்குப் பிறகும் கோடிக்கணக்கான தொண்டர்களால் இயக்கம் நிலைத்து நிற்கும். அதிமுக தொடங்கிய 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்துள்ளது. சசிகலா வருகையால் அதிமுகவிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. 16-ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக கூறியிருக்கும் சசிகலா, சிறையில் இருந்து வந்த பிறகு ஏன் செல்லவில்லை. அரசியல் செய்வதற்காக ஏதேதோ கூறிக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
மேலும், அதிமுகவினரும் யாரும் சசிகலா பின்னால் செல்ல மாட்டார்கள். அதிமுக இமயமலை போல் 1 கோடியே 46 லட்சம் வாக்காளர்களை கொண்டு உயர்ந்து இருக்கிறது என்றும் தெரிவித்தார்.


