கோவையில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத 1 லட்சம் 80 ஆயிரம் ரூபாய் தொகையை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை சாயிபாபா காலனி அருகேயுள்ள பாரதிபார்க் 2-வது வீதியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் உதவி இயக்குநர் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று (அக். 13) இரவு திடீரென, இந்த அலுவலகத்தில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனைக்கு வந்தனர். திவ்யா கூடுதல் எஸ்.பி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், மற்றும் போலீஸார் என 7 பேருக்கும் மேற்பட்டோர் இந்தக் குழுவில் இருந்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகத்தில் நுழைந்தவுடன் அங்கிருந்த அதிகாரிகளின் செல்போன்களை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்தனர். தற்காலிகமாக அலுவலகத்தில் இருந்த தொலைபேசி இணைப்புகளை துண்டித்தனர். பொதுமக்களை அங்கிருந்த வெளியே அனுப்பினர். மேலும் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் இருந்தனர். இதையடுத்து, அலுவலக கதவுகளை மூடி விட்டு, ஒவ்வொரு அறையாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
இதையடுத்து உதவி இயக்குநர் அறை, ஊழியர்கள் உள்ள இடம், அலுவலக மேஜைகள், உணவருந்தும் இடங்கள், கண்காணிப்பாளர் அறை, கோப்புகள் பராமரிக்கும் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 1 லட்சம் 80 ஆயிரம் ரூபாய் தொகையை பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




