புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் கென்னடி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் நடராஜன், வெங்கிடு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் உஷாராணி சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி மற்றும் மாநில செயலாளர் ஏசையன் ஆகியோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும், அனைத்து பணப் பயன்களும் வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு பொருந்தும் என்ற அரசானை எண்.625ஐ கணக்கில் கொள்ளாமல், புதிய ஓய்வூதிய திட்டம் சந்தா தொகைப் பிடிப்பதை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்ட நிதித்துறை சிறப்பு செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டம் காரணமாக ஈரோடு ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பானது.

