திண்டுக்கல்: கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனப்பகுதி அடர்ந்த பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வன விலங்குகளான காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைகள், யானைகள், பன்றிகள், கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து, கொடைக்கானல் நாயுடுபுரம் குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.



