Type Here to Get Search Results !

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவு

திருப்பூர்: கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.


திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தியறிக்கையில்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் விற்பனைகள் மற்றும் மருந்து கடைகள்  தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்களும்  காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை 50% சதவீத இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி என்று அந்த  செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்கெட் மற்றும் வணிக வளாகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க தடை விதிக்கப்படுவதாகவும் செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


திருப்பூர் மாநகரில் அமைந்துள்ள 33 வணிக பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், உடுமலைபேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள 13 வணிக பகுதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும், பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள், உணவு பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.


மேலும், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. 


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் சேராதவாறு ஒழுங்குபடுத்தி கண்காணிக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை உதவியுடன் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.


கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடிகள் வழியாக திருப்பூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT – PCR  ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை சான்றிதழில் அதாவது, கொரோனா இல்லை என்ற சான்றிதல் அல்லது 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.


பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி நோய் தொற்று பரவாமல் தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு திருப்புர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies