இன்று நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆகியவை நடைபெற்றது.
இந்தநிலையில், ஜூன் 24ஆம் தேதியுடன் சட்டமன்றம் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, திமுக அரசு முதல்முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவித்துள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் நிதித் துறை அலுவலர்கள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

