தமிழக கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதுவரை 80 கோயில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.
மேலும், குளங்கள், கோசாலைகள், தேர்கள் ஆகியவற்றை பராமரிக்க பல கோரிக்கைகள் எழுந்துள்ளது. ஆகையால், அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. ஆகம விதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட உள்ளனர். 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்படும். அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் பல இடங்களில் கேட்டு அர்ச்சனை செய்து வருகிறார்கள் என்றார்.
மேலும், அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. அது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளதே என்ற செய்தியாளர் கேள்விக்கு, உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் அமைச்சர் சேகர்பாபு கூறினார். மேலும் அவர் பேசுகையில், அவர் தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றம் சென்று அதை நிரூபிக்கட்டும். அதிமுக அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய தவறிவிட்டது. மடைமாறி சென்றவர்களை சரிசெய்யவேண்டியது தமிழக அரசின் கடமை. காமாலை காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் நிறமாகதான் இருக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

