கேரளத்திலிருந்து முறையான சான்றிதழ்கள் இன்றி கோவைக்கு வரும் வாகனங்களை, கேரளாவிற்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, கோவை ரயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை குறித்த தடுப்பு பணிகளை, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுடன் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, தமிழக–கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடிக்கு சென்ற அமைச்சர் வனத்துறை ராமச்சந்திரன், அங்கு மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாகவும், கோவையில் 230 பேர் அளவிற்கு பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததாலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். கொரோனா பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ், தடுப்பூசி இரண்டு தவணை போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே, தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இரு மாநில அரசுகளுக்கும் சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே கண்காணிப்பை அதிகரித்து உள்ளதாக விளக்கம் அளித்தார். மேலும், கேரளாவிலிருந்து முறையான சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது, கேரளாவிலிருந்து முறையான சான்றிதழ் இல்லாமல் தமிழகம் வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி கேரளாவிற்கே அனுப்பிவிடுகிறார்கள். அதேபோல், கேராளவிலிருந்து நடந்து வருபவர்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்களை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்கிறார்கள். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வருபவர்களை கேரளாவிற்கே திருப்பி அனுப்புகிறார்கள். வாளையாறு சோதனைச்சாவடியில் கடந்த 2ஆம் தேதிமுதல் சோதனைகள் நடைபெற்றாலும் நேற்று முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


