அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை இருகிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அதிமுகவின் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். மதுசூதனனுக்கு 80 வயது. மூச்சுதிணறல் பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணியில் இருந்த மதுசூதனன் 1991-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று கைத்தறிதுறை அமைச்சரானார். அதிமுகவின் அவைத்தலைவராக சுமார் 15 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் உள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் மதுசூதனன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக எடப்பாடி கே.பழனிச்சாமி- ஓ.பன்னீர்செல்வம் நடுவே அமர்ந்தவாறு அவர்களிடம் துக்கம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஞ்சலி செலுத்திய பின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி, மதுசூதனன் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை மா சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



